728x90 AdSpace

<>
Latest News
Monday, 16 September 2019

டொக்ரர் அன்ரிக்காக கரிகாலனை மன்னித்த பிரபாகரன்… மனமுடைந்த விதுஷா இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 51


கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கைகள்

பற்றி குறிப்பிட்டிருந்தோம். கடந்த வாரத்தில் அனுராதபுர வான்படை தளம் மீதான ஒப்ரேஷன் எல்லாளன் பற்றி குறிப்பிட்டிருந்தோம். 

இந்த பகுதியின் ஆரம்பத்தில் நான் காம் கட்ட யுத்தத்தின் ஆரம்பகால கட்டங்கள், மன்னாரில் இருந்து இராணு வம் எப்படி நகர்வை ஆரம்பித்தது, புலிகளின் எதிர்தாக்குதல்கள் பற்றி யெல்லாம் விரிவாக குறிப்பிட்டிருந் தோம்.

அடுத்த சில வாரங்கள் வன்னியில் நடந்த தரை யுத்தம் பற்றி குறிப்பிடவுள் ளோம். விடுதலைப்புலிகள் எப்படி இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி னார்கள், அப்போது என்ன நடந்தது என்பது பற்றி அடுத்த வாரங்களில் அறிந்து கொள்ளலாம். 

இந்த தொடரின் ஆரம்பத்தில் வந்த பகுதிகளை படிக்காத வாசகர்களிற்காக மிகச்சுருக்கமாக 2006 இல் மன்னார் முனையில் எப்படி யுத்தம் ஆரம்பித்தது, புலிகளின் பின்னடைவிற்கு காரணம் என்னவென்பதை குறிப்பிட்டு விடுகின் றோம். 

மன்னாரில் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த சமயத்தில் மன்னார் கள முனைக்கு பொறுப்பாக இருந்தவர் ஜெயம். தள்ளாடியில் இருந்து படை நட வடிக்கையை 58வது டிவிசன் ஆரம்பித்தது. வவுனியாவில் இருந்து 57வது டிவிசன் நகர்ந்தது. மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் நகர்ந்தது.

இதில் தள்ளாடியிலிருந்து நகர்ந்த 58வது டிவிசனின் நகர்வை பற்றித்தான் குறிப்பிட வேண்டும். மன்னாரில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் சில கிலோ மீற்றர் தூரத்தை கடக்க போரிட்டார்கள். விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதல் பலமாக இருந்தது என்பதைவிட, இடத்தை கைப்பற்றும் நோக்கம் இராணு வத்திற்கு இருக்கவில்லை. 

தொடர்ந்து சண்டைபிடித்து விடுதலைப்புலிகளின் ஆளணியை சேதமாக்கு வதே இராணுவத்தின் நோக்கம். மன்னார் களமுனையில் 2006 இல் அதிகம் இழப்பை சந்தித்த படையணி மாலதி படையணி. 2006 இல் மட்டும் மன்னார் களமுனையில் 320 மாலதி படையணி போராளிகள் மரணமானார்கள்.

புலிகளின் சில திட்டமிடல் குறைபாடுகளால் பாரிய மண் அணைகள் அமைக் கப்பட்டும் இராணுவத்தின் நகர்வை தடுக்க முடியவில்லை. முழங்காவி லிருந்து அண்மையாக ஜெயபுரம், நாச்சிக்குடா பகுதிகளை அண்டி பாரிய மண் அணை அமைக்கப்பட்டது. 

அதை கடந்து இராணுவத்தால் முன்னேற முடியாமல் இருந்தது. அந்த அணை முழுமையாக அமைக்கப்பட்டு முடியவில்லை. நாச்சிக்குடாவிற்கு அண்மை யாக மண் அணை அமைக்கப்படாத பகுதிக்குள்ளால் இராணுவம் நகர்ந்தது. 

ஆரம்பத்தின் மன்னார் களமுனை தளபதியாக ஜெயம் இருந்தார். இராணு வத்தின் நகர்வை அவரால் தடுக்க முடியவில்லையென்றதும், பானுவிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. 

கடந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்ட இந்த தகவல்களை மீள நினை வூட்டிக்கொண்டு, தொடரின் புதிய பகுதிக்கு அழைத்து செல்கிறோம்.பானு வன்னி களமுனையை பொறுப்பேற்க முன்னர், நடந்த சில சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். கருணாவின் பிரிவின் பின்னர், கேணல் ரமேஷ் கிழக்கு பிராந்திய தளபதியாக புலிகளால் நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்த சமயத்தில் திருகோணமலையில் சொர்ணம், மட்டக்களப்பில் பானு ஆகியோர் இருந்தனர். இவர்களிற்கு எல்லாம் கட்டளையிடுபவராக ரமேஷ் ஏன் நியமிக்கப்பட்டார்? இந்த இடத்தில்தான் பிரபாகரனின் ஸ்டைல் ஒன்றை சொல்ல வேண்டும். 

கருணாவின் பிரிவின் பின்னர் கிழக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட ரமேஷ் மீது கொண்ட நம்பிக்கையால் அந்த நியமனம் வழங்கப்படவில்லையென்பதே உண்மை. கருணா பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது, அதை தெரிந்தவர்க ளில் ரமேசும் ஒருவர். 

பின்னர்தான் அதை புலிகளிற்கு தெரியப்படுத்தினார். கருணாவின் பிரிவு ஆரம் பத்தில் தனிப்பட்ட காரணங்களினால் நிகழ்வதாகவே இருந்தது. நிதி விவ காரங்களில் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்குமாறு புலிகள் கேட்க, கரடியனாறில் பலத்த பாதுகாப்புடன் கருணா தனி நிர்வாகத்தை ஆரம்பித்தார். 

இந்த சமயத்தில் கருணாவின் பிரிவிற்கு கோட்பாட்டு விளக்கங்கள் கொடுக்க உதவியவர் பத்திரிகையாளர் தராகி சிவராம். கருணாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, கருணா அணியின் தத்துவாசிரியராக மாறும் ஆசை அவ ரிற்கு ஏற்பட்டுவிட்டது. 

பின்னர் புலிகள் “சொல்வது மாதிரி சொல்லி“த்தான் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் தவிர்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருமே கருணாவின் பிரிவை ஆதரித்தார்கள். இதில் இருவர் முக்கியமானவர்கள். 

கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த ரமேஷ், கிழக்கு அரசியல்துறை பொறுப்பாக இருந்த கரிகாலன் ஆகியோரே அவர்கள். ஜிகாத்தன், ஜிம்கெலி தாத்தா, ஜெயம், ரொபர்ட், விசு போன்ற தாக்குதலணி தளபதிகள் எல்லோரும் கருணாவின் கிளர்ச்சியை ஆதரித்தனர். 

இந்த சமயத்தில் பிள்ளையான், கருணாவின் மெய்ப்பாதுகாவலர். அவர் முக்கி யஸ்தர் பட்டியிலிலேயே இருக்கவில்லை. முக்கியஸ்தர்களையெல்லாம் புலிகள் சுட, கீழ் வரிசையில் இருந்த பிள்ளையான் முக்கியஸ்தரானார். 

கருணா பிரிவதாக அறிவித்த சமயத்தில், அந்த முடிவை கரிகாலன் ஆதரித் தார். பிரிவின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் அறிவுறுத்தலின்படி, கருணாவை ஆதரிப்பதை போல ரமேஷ் காட்டிக் கொண்டார். கருணா பிரிந்ததும், அங்கி ருந்த முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரையும் தொலைத்தொடர்பு கருவிகளில் தொடர்புகொண்டு புலிகள் பேசினார்கள். 

வன்னியிலிருந்து முக்கிய தளபதிகள், நாகர்கோவில் முன்னரணை பொறுப் பேற்றிருந்த ஜெனார்த்தனன், வன்னியிலிருந்த கிழக்கின் முக்கிய போராளிகள் இந்த பொறுப்பை ஏற்றிருந்தனர். கருணாவுடன் பிரிந்து சென்றவர்களை மீள வும் தம்முடன் இணையும்படியும், அவர்களிற்கு எந்த பிரச்சனையுமில்லை யென்றும் புலிகள் வாக்களித்தனர். 

இதையடுத்து பெருமளவான போராளிகள், கருணாவை விட்டு விலகி வந்தனர். என்றாலும் ரமேஷ் பற்றி புலிகளிடம் முழுமையான நம்பிக்கை யிருக்கவில்லை. அவர் இரண்டு தோனியிலும் கால் வைக்கிறாரோ என்ற சந்தேகமும் புலிகளிடம் இருந்தது. 

2004 மார்ச் 03ம் திகதி புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக கருணா அறிவித்தார். அன்று இரவு மார்ஷல் (பின்னாளில் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இருந்தவர்- கிழக்கை சேர்ந்தவர்) ரமேஷை தொடர்பு கொண்டு பேசினார். 

கருணாவுடன் சென்றால், மன்னிக்கப்பட மாட்டார் என்றும், கருணாவுடன் நடக்கும் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் நிலையில் இருப்பதால் அவர் உங்களை யெல்லாம் கைவிட்டு விடலாமென கூறினார். 

மார்ஷலின் தகவலால் ரமேஷ் ஆடிப்போய் விட்டார். புலிகள்- கருணா பிரிவில் இனி சமரசத்திற்கே இடமில்லையென்றுதான் ரமேஷ் நினைத்திருந்தார். இரண்டு தரப்பும் பேசுகிறார்கள் என்ற தகவல் அவருக்கு புதியது. 

திகைத்து விட்டார். கருணா பிரிவதென முடிவெடுத்த ஆரம்ப கட்டத்தில் அதற்கு ஆதரவானவராக ரமேஷ் காண்பித்து கொண்டிருக்கலாம். ஆனால், அதை கருணாவோ, ரமேஷோ சொன்னால்தான் உண்டு. கருணா விவகாரம் ஒரு அளவிற்கு மேல் சென்ற பின்னரே, இந்த விவகாரத்தை பொட்டம்மானுடன் பேசினார். 

ரமேஷை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் கையாண்டதால்தான், அவர் கிழக்கு மாகாண தளபதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது சம்பிரதாய பொறுப்பாக இருந்தது. இதற்குள் கிழக்கு அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலனை யாரும் கணக்கெடுக்கவில்லை. 

கரிகாலனின் மனைவிதான் டொக்ரர் அன்ரி (எழில்மதி). பிரபாகரன் குடும்பத் தின் தனிப்பட்ட மருத்துவர். அதனால் எந்த நேரத்திலும், என்ன விடயத்தையும் பிரபாகரனுடன் நேரடியாக பேச அவரால் முடியும். 

கரிகாலனுடன் பேசி, அவரை வன்னிக்கு வர சம்மதிக்க வைத்த டொக்ரர் அன்ரி, அவருக்கு மன்னிப்பு வாங்க விரும்பினார். கரிகாலன் செய்த வேலை பிரபாகரனிற்கு துளியும் பிடிக்காது என்பது அன்ரிக்கு தெரியும். 

அதனால் இந்த விடயத்தை பிரபாகரனுடன் நேரடியாக பேசவில்லை. கருணா வின் பிளவு சமயத்தில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் பிள்ளைகளும் முள்ளியவளையில் குடியிருந்தனர். 

பிரபாகரன் விசுவமடு முகாமில் தங்கியிருந்தார். விசுவமடு 12ம் கட்டையில் உள்ள பிரபாகரனின் முகாம், யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டிருந்தது. மிக விரைவில் அந்த காணியின் உரிமையாளரிடம் அதை இராணுவம் கையளிப்பதாக அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்தவர்கள் அந்த காணியின் உரிமைாளர்கள். அந்த முகாமில்தான் பிரபாகரன் தங்கியிருந்தார். மதிவதனி, டொக்ரர் அன்ரி, வான்புலி தளபதியாக இருந்த சங்கரின் மனைவி குகா மூவரும் நெருங்கிய நண்பிகள். 

யுத்தத்தின் இறுதிநாட்களில் மதிவதனியும், குகாவும் ஒன்றாகவே தங்கியிருந் தனர். அது பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம். டொக்ரர் அன்ரி முள்ளியவளைக்கு மதிவதனி வீட்டுக்கு சென்று, நிலைமையை சொன்னார். 

கரிகாலனை வன்னிக்கு அழைப்பதாகவும், அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு பிரபாகரனிடம் கேட்குமாறும் அன்ரி கேட்டுக்கொண்டார். அன்ரியையும் அழைத்துக்கொண்டு பிரபாகரனின் விசுவமடு முகாமிற்கு மதிவதனி உடனே புறப்பட்டார். பிரபாகரனையும் அன்ரியையும் நேரில் பேச வைத்தார். 

அன்ரி கண்ணீருடன் பேச, பிரபாகரன் இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். அன்ரியின் கோரிக்கையை பிரபாகரனால் தட்ட முடியாது. ஆனால் அன்று அவர் அதிகம் பேசவில்லை. இரண்டுநாளில் கரிகாலன் வந்துவிட வேண்டும் என்பதை மட்டும் சொன்னார்.

இப்படித்தான் ரமேஷ், கரிகாலன் வன்னிக்கு வந்து சேர்ந்தார்கள். இருவரையும் புலனாய்வுத்துறை உயர்மட்டத்தினர் மேலோட்டமான விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவுசெய்ததுடன் விடயம் முடிந்தது. கரிகாலன் பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம்- மட்டக்களப்பிலிருந்து கரிகாலன் திரும்பி வந்ததன் பின்னர், யுத்தத்தின் இறுதிநாள் வரை அவரை தனிப்பட்ட முறையில் பிரபாகரன் சந்திக்கவேயில்லை!

இதன்பின் ரமேஷ் கிழக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டார். உண்மை யில் இந்த நியமனம் வெறும் சம்பிரதாய நியமனம். கிழக்கை உண்மையில் வழிநடத்தியது மூவர். திருகோணமலையை சொர்ணம். மட்டக்களப்பை பானு. அம்பாறையை ராம் வழிநடத்தினார்கள். 

கருணா பிரிவு வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை தூண்டும் வாய்ப்பை ஏற் படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தவர்களிற்கு எதிரான கடுமையான பிரசா ரத்தை கருணா அணி நடத்தியது. 

பிரதேசவாதத்தை வளரவிடக்கூடாதென புலிகள் நினைத்தனர். யாழ்ப் பாணத்தை சேர்ந்த பானு அல்லது தீபன் போன்றவர்களை கிழக்கு தளபதியாக் கினால், கருணாவின் பிரசாரம் எடுபட்டு விடும். கருணாவின் பிரசாரத்திற்காக ரமேஷிற்கு பொறுப்பு வழங்கவும் முடியாது. 

இந்த சிக்கலை சமாளிக்க புலிகள் கையாண்ட ஐடியாவே- ரமேஷை கிழக்கு பிராந்திய தளபதியாக அறிவித்தனர். உண்மையில் ரமேஷிற்கு அப்படியொரு அதிகாரமே கிடையாது. திருகோணமலையை சொர்ணமும், மட்டக்களப்பை பானுவும், அம்பாறையை ராமும் வழிநடத்தினார்கள். 

இவர்களிற்கு உத்தரவிடும் எந்த அதிகாரமும் ரமேஷிற்கு வழங்கப்பட வில்லை. 2004 ஏப்ரல் முதல் வாரத்தில் கிழக்கை கருணா குழுவிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையை புலிகள் ஆரம்பித்தபோது, ரமேசும் நடவடிக்கை குழுவில் இருந்தார். 

கருணா அணியிலிருந்த முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு பேசி, அவர் களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கும் வேலையை ரமேஷ் செய்தார். கருணா குழுவின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஜிம்கெலி தாத்தா, ரொபர்ட், விசு போன்றவர்கள். 

ஜிம்கெலி தாத்தா, ரொபர்ட் இருவரும் வன்னியில் ஜெயசிக்குறு தாக்குதல் முறியடிப்பில் பெரும் பங்காற்றிய தளபதிகள். இவர்கள் தாக்குதல் தளபதிகளே தவிர, அரசியல் அனுபவமற்றவர்கள். கருணாவில் விசுவாசமிக்கவர்கள். கருணா பிரிவதாக அறிவித்தபோது, அவருடன் சென்றுவிட்டார்கள். 

பின்னர், ரமேஷ் அவர்களுடன் பேசினார். இந்த பிளவினால் போராட்டத்திற்கு நேரும் ஆபத்தை புரியவைத்து, அவர்களை மீள தம்முடன் இணையுமாறு கேட்டார். புலிகளுடன் இணைய அவர்களிற்கு முழு விருப்பம் இருந்தாலும், புலிகள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. 

ஜிம்கெலி, ரொபர்ட், விசு உள்ளிட்ட பன்னிரண்டு கிழக்கின் தளபதிகளிற்கு ரமேஷ் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்தார். அவர்களிற்கு எந்த ஆபத்தும் நிகழாதென வாக்களித்தார். இந்த வாக்குறுதியை நம்பிய தளபதிகள் புலி களிடம் சரணடைந்தனர். 

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், மட்டக்களப்பிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். கருணாவின் மகளிர் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சாளி/ நிலாவினி உள்ளிட்ட நான்கு பெண் போராளிகளும் சரணடைந்திருந் தனர். 

அவர்கள் முல்லைத்தீவின் வள்ளிபுனத்தில் இருந்த அல்பா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.கருணா பிளவின் பின்னர் பானு மட்டக்களப்பின் தளபதியாக செயற்பட்டார். 

கிழக்கில் மாவிலாற்றில் தொடங்கிய யுத்தம், படிப்படியாக மட்டக்களப்பு அம்பாறைக்கும் பரவியது. கஞ்சிகுடிச்சாறு, வாகரை என புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளை கைப்பற்றிய இராணுவம் இறுதியில் குடும்பிமலையை (தொப்பிகல) கைப்பற்றியது. 

11.07.2007 தொப்பிகலவை முழுமையாக கைப்பற்றியதாக அரசு அறிவித்தது. தொப்பிகலவில் கிழக்கு படையணிகளுடன் நிலைகொண்டிருந்த பானு, அடர்ந்த காட்டின் வழியாக பன்னிரண்டுநாள் நடைபயணத்தில் வன்னியை வந்து சேர்ந்தார். 

அந்த அணி காட்டிற்குள் இருக்கும் அருவி, குட்டைகளில்தான் தாகத்தை தீர்த்து கொண்டது. இது கொலரா தொற்றை அந்த அணிக்கு ஏற்படுத்தியது. காட்டுக்குள் இராணுவத்திற்கு தெரியாமல் நீண்ட நடைபயணத்தை செய்யும் அணிக்கு கொலரா தொற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும்? 

 கொலராவால் நடக்க முடியாமலிருந்தவர்களை காவிக்கொண்டு வந்தார்கள். முறையான சாப்பாடு இல்லாதநிலையில் இன்னொருவரை காவுவதும் பெரும் சிரமமான விடயம். மருந்துப்பொருட்கள் இல்லாதததால் உயிரிழப் புக்களும் ஏற்பட தொடங்கியது. 

ஏழு போராளிகள் அடர்ந்த காட்டுக்குள் கொலரா தொற்றில் உயிரிழந்தனர். அவர்களின் உடலை காட்டுக்குள் அடக்கம் செய்துவிட்டு, தொடர்ந்து நகர்ந்து, பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வன்னியை வந்தடைந்தார்கள். 

வன்னிக்கு வந்ததும், பானுவிற்கு மீண்டும் குட்டிசிறி மோட்டார் படையணி பொறுப்பு வழங்கப்பட்டது. சில மாதங்களில் அந்த பொறுப்புடன் மேலதிகமாக, மேற்கு களமுனை பொறுப்பு வழங்கப்பட்டது. 

அப்பொழுது இாணுவம் மன்னாரிற்குள் நகர்வை செய்துகொண்டிருந்தது. மூத்த தளபதிகள் விதுஷா, துர்க்கா போன்றவர்களும் அந்த களமுனையில் தான் இருந்தார்கள். ஏனெனில், மன்னார் களமுனையில் அதிகமாக பெண் போராளிகளே நின்றார்கள்.

மன்னார் களமுனையில் மாலதி படையணிதான் அதிகமாக இழப்பை சந்தித்தது என்பதை குறிப்பிட்டிருந் தேன். கட்டாயமாக படைக்கு சேர்க்கப் படுபவர்கள் சில வார பயிற்சியுடன் களமுனைக்கு வருவதையும், அத னால் இழப்பை சந்திப்பதையும் விதுஷா விரும்பவில்லை. 

மன்னார் களமுனையில் பெண்போராளிகளை உயிருடன் பிடித்து செல்லும் புதிய உத்தியை இராணுவம் கையாண்டது. பெண்களின் காவலரண்களை box அடித்து உயிருடன் பிடித்துசெல்ல ஆரம்பித்தார்கள். 

களத்தில் ஏற்படும் இந்த இழப்புக்கள் விதுர்ஷாவை அதிகம் பாதித்தது. அவர் உற்சாகமிழந்து, யுத்தத்தை வெல்ல முடியுமென்ற நம்பிக்கையுடன் இருக்க வில்லை. 

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: டொக்ரர் அன்ரிக்காக கரிகாலனை மன்னித்த பிரபாகரன்… மனமுடைந்த விதுஷா இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 51 Rating: 5 Reviewed By: Thamil