ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாமென கொள்கையள வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
எனினும், இந்த தீர்மானம் தமக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தாமல் இருக்கும் பொறுப்பை ஐ.தே.க ஏற்படுத்த வேண்டும். அதை ஐ.தே.க செய்தால் மாத்திரமே சஜித்தை எம்மால் ஆதரிக்க முடியுமென தமிழ் அரசு கட்சி நேற்று, ரணில்- சஜித்திடம் தெரிவித்துள்ளனா்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று மாலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று நடந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பி லுள்ள ஏனைய பங்காளி கட்சிகளை தவிர்த்து விட்டு, தமிழ் அரசு கட்சி மாத் திரமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டது.
தமிழ் அரசு கட்சியின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஐ.தே.க சார்பில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்க ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், கோட்டாபாய ராஜபக்ச தரப்பும் தமக்கு உத்தரவாதங்களை தந்துள்ளதாகவும், எனினும், இதுவரை அவர்களை ஆதரிப்பதில்லையென்ற கொள்கை முடிவையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்தமுறையை தாம் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை, ரணில் துஷ் பிர யோகம் செய்தார் என நேரடியாகவே குற்றம்சாட்டிய இரா.சம்பந்தன், அதனால் இம்முறை தெளிவான வாக்குறுதிகள் இல்லாமல் மக்கள் மத்தியில் தம்மால் செல்ல முடியாது என்றார்.
எம்முடன் பேசி நீங்கள் பிரச்சனையை தீர்க்காவிட்டால், நீங்கள் கையாள முடியாத சக்திகளையே வடக்கில் பலப்படுத்துவீர்கள். அது இலங்கைக்கும் ஆபத்தாக முடியும் என்றார்.
கடந்தமுறை தாம் ஈடுபாட்டுடன் இருந்ததாகவும், அது இம்முறையும் தொடர் பாகவும் கூறிய ரணில், கடந்தமுறை அனுபவத்தின் அடிப்படையில் சஜித் வென்றதும், ஒரு வருடத்தில் இனப்பிரச்சனைகயை தீர்ப்பது ஐ.தே.கவின் கொள்கையாக உள்ளது.
இதை தனிநபர்களால் மீற முடியாது என்றார்.
எனினும், தெளிவான உத்தர வாதங்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் சென்று உங்களிற்கு வாக்கு கோர முடியாது, நீங்கள் தெளிவான உத்தரவாதத்தை தந்தால் மட்டுமே பகிரங்கமாக எம்மால் உங்களை ஆதரிக்கும்படி கோர முடியும்.
அல்லது நாம் நடுநிலைமைதான் வகிக்க வேண்டும். நீங்கள் வெற்றிபெற்ற பின்னர், என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதில் ஒரு சிக்கலும் இருக்காது. அதன்பின், நாம் இணைந்து செயற்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூட்டமைப்பு தரப்பில் குறிப்பிடப்பட்டது.
எனினும், த.தே.கூ தம்மை ஆதரிக்காவிட்டாலும் வடக்கு மக்கள் கோட்டாபய விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது எமக்கு தெரியும். எனினும், அரசியல் ரீதியாக ஐ.தே.கவிற்கு அத எதிர்மறையான செய்தியை சொல்லும். குறிப்பாக சர்வதேச மட்டத்தில் சஜித்தை அது பலவீனப்படுத்தும்.
கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும். சர்வதேச அளவிலும் சஜித்தை பலப்படுத்தினாலே இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.த.தே.கூ நடுநிலை வகித்தால் அதன் செயற் பாட்டாளர்களும் வாக்களிப்பில் அசமந்தமாக இருந்து விடுவார்கள்.
இம்முறை நெருக்கடியான போட்டியிருக்குமென்பதால் ஒவ்வொரு வாக்கும் தமக்கு தேவையானதுதான் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எனினும், தமது தீர்வுத்திட்டத்தை பகிரங்கப்படுத்தினால் கோட்டாபயவிற்கு வாய்ப்பாகி விடும் என்பதை தெரிவித்த ரணில்,
வழிநடத்தல் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப் படையிலேயே புதிய அரசிலும் தீர்வு என்பதை தான் உத்தரவாதப்படுத்துவதாக ரணில் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்வு என சஜித்தும் வாக்களித்தார்.
எனினும், இதை நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்கள் ஏற்றுக் கொள் ளும் வகையில் இணைக்க வேண்டும், தீர்வு திட்டத்தை முழுமையாக பகிரங் கப்படுத்தா விட்டாலும், வாக்களிப்பதால் பலனில்லையென்ற நம்பிக்கை யீனத்தை ஏற்படுத்தாத விதத்தில் விஞ்ஞாபனத்தில் அதை இணைக்க வேண்டு மென கூட்டமைப்பு தெரிவித்தது.
அடுத்த ஓரிரு நாளில் சஜித் தரப்பை எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் சந்தித்து பேசுவ தெனவும், தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு பணிகள் நடந்து வருவதால் அடுத்த சில தினங்களிற்குள் அதை முடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பார்வைக்கு தருவதென்றும் முடிவானது.