தீவகத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்
உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள், மற்றும் ஆதரவாளர்களை அழைத்து, தமிழ் அரசு கட்சி நடத்திய கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதேச அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் என்ற போர்வையில் நடந்த இந்த கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட்டின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களை உடைத்து எடுக்கும் நடவடிக்கையென விமர்சனம் கிளம்பியுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதால், தமிழ் அரசு கட்சி மீண்டும் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பிக்கிறது என ஏனைய கட்சி பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தீவகத்தில் உள்ள கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இன்று வேலணையிலுள்ள தமிழ் அரசு கட்சி செயற்பாட்டாளரின் வீட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் என்றே அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று பிரதேச அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை. தவிரவும், கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் என்றால், கூட்டமைப்பு பிரமுகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து சென்றவர்களிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
தனியே தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் மாத்திரமே வந்திருந்தனர்.
மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், பொ.கனகசபாபதி ஆகியோர் வந்திருந்தனர். அபிவிருத்தி தொடர்பான கூட்டமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது கூட்டமைப்பிற்குள் உள்ள தீராத வியாதியான கட்சிகளிலிருந்து ஆட்களை உருவியெடுக்கும் அசிங்கமான தேர்தல் அரசியல் வேலையே இன்று இடம்பெற்றதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராசா, விரைவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளதாகவும், மாகாணசபை தேர்தல் அடுத்த வருட நடுப்பகுதியிலேயே வருமென்றும், ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடவுள்ளதால் கவனமாக இருக்க வேண்டுமென்றும், தேர்தல் வரும்போது யாரை ஆதரிப்பதென அறிவிப்பதாகவும் கூறினார்.
அத்துடன், பிரதேசத்தின் தமிழ் அரசுக்கட்சியின் தொகுதிக்கிளை தலைவருடன் கலந்துரையாடி செயற்படுமாறு அறிவுறுத்தினார்.
பங்காளிக கட்சிகளின் உறுப்பினர்களிற்கு இப்படி அறிவிப்பது அரசியல் நாகரிகமில்லாதபோதும், தேர்தல் நெருங்குவதால் மாவை வழக்கமான அரசியலில் இறங்கியிருக்கிறார்.
இதேவேளை, ஊர்காவற்துறை தொகுதிக்கிளை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இருவரும் ரெலோவில் இருந்து உருவியெடுக்கப்பட்ட உறுப்பினர்களே. 1000 ரூபா அங்கத்துவப்பணம் செலுத்தி, ரெலோவின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ள கனகையா, பெனடிக்ற் ஆகியோரே தொகுதிக்கிளை தலைவர், செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது. இன்று நடந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து ஆக்ரோசமாக முறுகுப்பட்டனர்.
கட்சியின் செயற்பாட்டாளர்களாக தாம் இருக்கும் நிலையில், தமக்கு தெரியாமல் எப்படி இந்த நியமனம் கொடுக்கலாமென அவர்கள் கட்சி பிரமுகர்களுடன் ஆக்ரோசமாக வாதிட்டனர். இந்த மல்லுக்கட்டல் நீண்டநேரம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் என்றபோதும், பங்காளிக்கட்சிகளின் அந்த பகுதி முக்கியஸ்தர்கள் அழைக்கப்படாதது, கட்சிகளை உடைக்கும் செயற்பாடா என பங்காளிக்கட்சிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.