இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய
மாநாடு விரைவில் இடம்பெறவுள்ளது. இதையொட்டி கட்சியின் வாலிபர் முன்னணி கட்டமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாலிபர் முன்னணியின் கருத்தை அறியவும் தலைமை விரும்பியிருந்தது.
சிலநாட்களின் முன்னர் வாலிபர் முன்னணிக்கும் தமிழ் அரசு கட்சி பிரமுகர்களிற்குமிடையிலும் சந்திப்பொன்று நடந்தது. மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சீ.வீ.கே.சிவஞானம் போன்ற கட்சி பிரமுகர்கள் இருந்து, இளைஞரணியின் கருத்துக்களை கேட்டனர். அந்தந்த தொகுதி பிரச்சனைகளை மனம் விட்டு பேசும்படி கூறியுள்ளனர்.
இதன்போது, தென்மராட்சி தொகுதி இளைஞர் அணியின் ஒரு பகுதியினர், தொகுதி தலைவர் கே.சயந்தனிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். சயந்தன் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர் தொகுதிக்கிளை தலைவராக பதவிவகிக்க தகுதியற்றவர் என்றார்கள்.
சயந்தன் தொடர்பாக சில காலங்களின் முன்னர் முகப்புத்தக உரையாடல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த விவகாரத்தையும் பட்டும்படாமலும் சுட்டிக்காட்டிய அவர்கள், அவரது தனிமனித ஒழுக்கம் குறித்தும் கேள்வியெழுப்பினர்.
அத்துடன் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சயந்தனின் சொந்த வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழ் அரசுக்கட்சி வேட்பாளரே தோல்வியடைந்திருந்தார்.
இதையும் சுட்டிக்காட்டி, சொந்த வட்டாரத்தையே வெல்லத் தெரியாதவர், நிர்வகிக்க தெரியாதவர் எப்படி தொகுதியை நிர்வகிப்பார்? வெல்ல வைப்பார் என காரசாரமாக கேள்வியெழுப்பினர்.
சயந்தன் தொகுதிக்கிளை தலைமைக்கு பொருத்தமற்றவர், அவர் அந்த பகுதியில் நீடிக்கும் வரை அங்கு அவருடன் இணைந்து வேலை செய்ய முடியாது என ஒரேயடியாக கூறினார்கள்.
வாலிப முன்னணியின் கருத்தறியும் கூட்டம் என்பதால், பிரமுகர்கள் மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.
முன்னதாக, சாவகச்சேரி உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியொருவர் சரவணபவன் எம்.பிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார்.
தமது பகுதி வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வு தமக்கு தெரியாமல் நடந்ததாக குற்றம்சாட்டினார்.
அந்த கூட்டத்தில் நடந்த சுவாரஸ்யமாக சம்பவம், மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்கும், சிறிதரனிற்குமான உரையாடல்.
கலையமுதன் பேச தொடங்கும்போது, ““சிறி அண்ணை உங்களை கிளிநொச்சி ஜமீன் என்கிறார்களே“ என்றார்.
இது சிறிதரனிற்கு கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும். “என்னை ஜமீன் என்கிறார்கள். ஜாமீன் என்கிறார்கள். அதனால் எனக்கு கவலையில்லை. நான் தலைவர் கைகாட்டிய கட்சியில் சேர்ந்தேன். எனது அப்பா தமிழ் அரசு கட்சியில் இருக்கவில்லை. அப்பாவால் நானும் கட்சிக்கு வரவில்லை“ என்றார்.
கலையமுதன் அமைதியானார்.
இதேவேளை, எம்.பிக்கள் பேசிக்கொண்டிருந்தபோது, தீவகத்தை சேர்ந்த சகோதரர்களான இருவர் அடிக்கடியும், கலையமுதன் இடையிடையேயும் குறுக்கீடு செய்தபடியிருந்தனர். இதனால் எம்.பிக்கள் அசௌகரியப்பட்டனர். இது நாகரிகமற்ற செயற்பாடு என கூத்த பிரமுகர்களிடையே அப்பிராயம் வந்தது. இதை நாடிபிடித்தறிந்த மாவை சேனாதிராசா, மூவரையும் குட்டு வைத்து உட்கார வைத்தார். இப்படி குறுக்கீடு செய்யக்கூடாது, உங்களிற்குரிய நேரம் வரும்போது பேசலாம் என்றார்.
இதேவேளை, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியடைந்த தென்மராட்சி இளைஞரணி முக்கியுஸ்தர் சுதர்சன், சிறிதரன் எம்.பியுடன் மல்லுக்கட்டினார். வரணி பகுதியில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சில வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை சுதர்சன் எதிர்த்து, எப்படி எமக்கு தெரியாமல் அங்கு நீங்கள் வேலை செய்யலாமென மல்லுக்கட்டினார்.
அவருக்கு சிறிதரன் எம்.பி, காரசாரமான பதில் கொடுத்தார். கட்சிக்குள் அண்மைக்காலத்தில் வந்தவர்கள் இப்படி ஏரியா பிரித்து செயற்படுவது தவறென்றும், வடமராட்சி கிழக்கை சேர்ந்த அவர் தென்மராட்சியில் தேர்தல் கேட்டு தோல்வியடைந்தவர், இந்த நிலையில் எப்படி வரணிக்குள் நாங்கள் வரக்கூடாதென கூறலாமென காரசாரமாக பதில் கொடுத்திருந்தார்.